புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-27ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இதற்கான மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணம் எதுவும் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஏற்கெனவே கட்டிய தேர்வு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், மத்திய அரசின், கல்வி அமைச்சகத்திற்கு உட்பட்ட உயர்கல்வி துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இயற்பியல் ஆசிரியர் தேஜஸ் ஹர்ஷத்குமார் என்பவரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதே போல், இந்த வழக்கில் கைதான குழந்தைகள் நல மருத்துவர் மனோஜ் சின்ஷுரே என்பவரையும் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் இருவரையும் ஜூன் 1-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.