தேசிய செய்திகள்

நீட் வினாத்தாள் கசிந்த வழக்கு: கைதான முக்கிய குற்றவாளிக்கு 6 நாட்கள் சி.பி.ஐ. காவல் - கோர்ட்டு உத்தரவு

நீட் வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதற்கான மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணம் எதுவும் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஏற்கெனவே கட்டிய தேர்வு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசின், கல்வி அமைச்சகத்திற்கு உட்பட்ட உயர்கல்வி துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக மராட்டிய மாநிலம் அகில்யாநகர் பகுதியை சேர்ந்த தனஞ்செய் லோகாண்டே, நாசிக்கை சேர்ந்த சுபம் கைமார், ஜெய்ப்பூரை சேர்ந்த மங்கல் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால் மற்றும் குருகிராமை சேர்ந்த யாஷ் யாதவ் ஆகிய 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி தனஞ்செய் லோகாண்டேவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி அஜய் குப்தா, தனஞ்செய் லோகாண்டேவை 6 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.