தேசிய செய்திகள்

நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவா? தேசிய தேர்வு முகமை மறுப்பு

நீட் கேள்வித்தாள் கசிந்த்தாக பரவும் செய்தி தவறானது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியது. இந்த நிலையில் வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நீட் மறு தேர்வு வினாத்தாளும் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தேசிய தேர்வு முகமை, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மோசடி கும்பல்

நீட் (இளநிலை) 2026 மறுதேர்வுக்கான வினாத்தாள் கசிந்துவிட்டது, முன்கூட்டியே கிடைக்கிறது அல்லது விற்பனை செய்யப்படுகிறது என சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுந்தகவல் செயலிகளில் சில தகவல்கள் பரவுவதாக தேசிய தேர்வு முகமையின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை, புனையப்பட்டவை.இதுபோன்ற தகவல்கள் திட்டமிட்ட முறையில் செயல்படும் தேர்வு மோசடி கும்பல்களால் பரப்பப்படுகின்றன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பதற்றத்தை பயன்படுத்தி போலி வினாத்தாள்களை விற்பனை செய்வதாக கூறி பணம் பறிப்பதே அவர்களின் நோக்கம்.

புகார் அளிக்கப்படுகிறது

தேர்வு நடைமுறையின் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வர்களுக்கும் நியாயமான மற்றும் பாதுகாப்பான தேர்வை நடத்த தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பும் சமூக வலைத்தள கணக்குகள், சேனல்கள் மற்றும் பதிவுகளை என்.டி.ஏ. கண்டறிந்து வருகிறது. அவை உடனடியாக நீக்கப்படுவதற்காக சம்பந்தப்பட்ட தளங்கள் மற்றும் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது போலி தகவல்களை உருவாக்குதல், பரப்புதல் அல்லது பகிர்தல் மற்றும் மாணவர்களை ஏமாற்ற முயற்சிப்பது கடுமையாக தண்டிக்கப்படும் குற்றமாகும். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதுபோன்ற தகவல்களை நம்பவோ, பணம் செலுத்தவோ அல்லது பிறருக்கு பகிரவோ கூடாது. மோசடி கும்பல்களின் வலையில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வதந்திகளை நம்ப வேண்டாம்

எனவே, தேர்வர்கள் அனைவரும் வதந்திகளை நம்பாமல் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொடர்பு தளங்கள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நீட் (இளநிலை) 2026 தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் முழு நம்பிக்கையுடன் தங்களது தேர்வு தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்களது கடின உழைப்பே வெற்றியை தீர்மானிக்கும். நியாயமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான தேர்வை நடத்த உறுதிபூண்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளது.