புதுடெல்லி
2024-ம் ஆண்டு மற்றும் தற்போது 2026-ம் ஆண்டில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், தேர்வு எழுதிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இயக்குநர் ஜெனரல் அபிஷேக் சிங் செய்தியாளர்களிடம் இன்று பதிலளித்து பேசினார்.
அவர் கூறும்போது, வினாத்தாள் கசிவு செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அது யாருக்கும் நல்லதல்ல. இதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்று கொள்கிறோம். ஏனெனில் நடந்த விசயம் தவறானது. நாங்கள் தேர்வை ரத்து செய்திருக்கிறோம். நாங்கள் மீண்டும் தேர்வை நடத்துவோம் என உறுதிமொழியும் அளிக்கிறோம் என்றார்.
இந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் யாருக்கேனும் தொடர்பு உண்டா? என கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், அவர்கள் உள்ளே இருப்பவரோ அல்லது வெளியே இருப்பவரோ, யாராக இருப்பினும் அவர்களை சி.பி.ஐ. கைது செய்து, தண்டிக்க வேண்டும். அதனால், அந்த விசயம் தொடக்கத்திலேயே சரி செய்யப்படும் என கூறினார்.
இதனை அடுத்து, மறுதேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்த 7 முதல் 10 நாட்களில் அதற்கான கால அட்டவணை பற்றி நாங்கள் தெரிவிப்போம் என்றார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதற்கான மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணம் எதுவும் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஏற்கெனவே கட்டிய தேர்வு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.