தேசிய செய்திகள்

நீட் மறுதேர்வு: மாணவர்கள் அச்சம் பதற்றமின்றி தேர்வெழுத வேண்டும் - கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

நீட் மறுதேர்வை மாணவர்கள் அச்சமின்றியும் பதற்றமின்றியும் எழுத வேண்டும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதியானதைத் தொடர்ந்து, கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது. அந்த ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு இன்று மீண்டும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்று நடைபெறும் நீட் தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் எந்தவித அச்சமோ, பதற்றமோ இன்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

தங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி சிறப்பாக தேர்வு எழுதுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தியாவின் புதிய தலைமுறையின் எதிர்காலத்துடன் யாரும் விளையாடக் கூடாது. மாணவர்களின் மனநலனை பாதிக்கும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம். இன்னும் சில மணி நேரங்களில் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.