நாடு முழுவதும் கடந்த 3-ந்தேதி நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் நடத்தி வருகிறது. ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்குப் பதிலாக அடுத்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.
இந்த தேர்வை 100 சதவீதம் தவறில்லாமல் நடத்த அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் மனவேதனையில் உள்ளனர். அந்த வேதனையைப் புரிந்துகொண்டு பொறுப்பேற்று, நான் இன்று இதைச் சொல்கிறேன். நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அந்த தேர்வில் சில மதிப்பீடுகளில் சமரசம் செய்யப்பட்டு இருந்ததால் அதை ரத்து செய்ய வேண்டியிருந்தது. கல்வி முறையில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மற்றும் தேர்வு மாபியாவின் சதியால், ஒரு மாணவர் கூட தங்களுக்குரிய இடத்தை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் நாங்கள் விமர்சனங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். அதை ஏற்கிறோம். ஆனால் இந்த அமைப்பை சரி செய்வது எங்கள் பொறுப்பு. இந்த பிரச்சினையில் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது எங்கள் பணி அல்ல. எனவே அடுத்த மாதம் 21-ந்தேதி நடைபெறும் நீட் மறுதேர்வை எந்தவித தவறும் இன்றி சீராக நடத்துவதில் அரசு உறுதியுடன் இருக்கிறது. அதை 100 சதவீதம் பிழையின்றி நடத்துவது எங்கள் பொறுப்பு. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.