தேசிய செய்திகள்

நேபாளம் வெள்ளப்பெருக்கு: பீகாரை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை

பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்; ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லக்னோ,

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திடீர் வெள்ளம்

நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கிராமத்திற்குள் புகுந்த வெள்ள நீரால் வீடுகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதில், ஏராளமான பொதுமக்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

384 பேர் மாயம்

தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான சியாப்ரு மற்றும் திமுரே ஆகிய இடங்களில் மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாததால் மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் 105 இந்தியர்கள் உட்பட 384 வெளிநாட்டினர் மாயமாகி உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பீகார்

நேபாளத்தில் இருந்து பீகாருக்குள் பல முக்கிய ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பீகாரில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோஷி, கண்டக், பாகமதி உள்ளிட்ட ஆறுகள் பாயும் 8 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பீகார் மாவட்டங்களான சுபௌல், சஹர்சா, மாதவ்புரா, அராரியா, பூர்ணியா, தர்பங்கா உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயர்மட்டக் குழு

இந்த சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிப்பதற்காக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பீகார் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி தெரிவித்துள்ளார். கண்டக் ஆற்றங்கரையோர மாவட்டங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்பு நிலையைச் சமாளிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அறிவுறுத்தல்கள்

பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கண்டக் ஆற்றங்கரையிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் தேவையில்லாமல் ஆற்றின் அருகே செல்லக்கூடாது. எந்தவொரு வதந்தியையும் புறக்கணித்து, நிர்வாகத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள். நீர்மட்டம் உயர்ந்தாலோ அல்லது வேறு ஏதேனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலோ, நிர்வாகத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை உடனடியாகப் பின்பற்றுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்திலும் எச்சரிக்கை

பீகாரை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் பகுதிகள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கண்டக் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உள்ளூர் நிர்வாகம் முழு விழிப்புடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.