தேசிய செய்திகள்

பெங்களூருவில் 100 ஏக்கரில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்: சித்தராமையா அடிக்கல் நாட்டினார்

சூர்யாநகரில் கட்டப்பட உள்ள இந்த புதிய ஸ்டேடியம் தான் நாட்டிலேயே 2-வது பெரிய ஸ்டேடியம் ஆகும்.

.பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியானார்கள். இதையடுத்து, பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா சூர்யாநகர் 4-வது ஸ்டேஜில் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்தது. அதன்படி, 100 ஏக்கர் பரப்பளவில் 80 ஆயிரம் இருக்கைகளுடன் புதிய ஸ்டேடியம் கட்டுவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மதியம் நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு புதிய ஸ்டேடியத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். அத்துடன் வீட்டுவசதித்துறை சார்பில் பொதுமக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கும் திட்டத்தையும் சித்தராமையா தொடங்கி வைத்தார் அதன்பிறகு, சூர்யாநகரில் அமையும் விளையாட்டு கிராமத்தையும் முதல்-மந்திரி சித்தராமையா பார்வையிட்டார். சூர்யாநகரில் அமைய உள்ள புதிய ஸ்டேடியம் ரூ.943.46 கோடி செலவில் கட்டப்படுகிறது.3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேடியத்தில் உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது.சூர்யாநகரில் கட்டப்பட உள்ள இந்த புதிய ஸ்டேடியம் தான் நாட்டிலேயே 2-வது பெரிய ஸ்டேடியம் ஆகும். குஜராத்தில் உள்ள ஸ்டேடியத்தில் 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 80 ஆயிரம் இருக்கைகளுடன் சூர்யாநகரில் அமையும் இந்த ஸ்டேடியம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.