புதுடெல்லி,
உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் தொழில்துறை பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் மூலப்பொருட்களை மர்ம நபர்கள் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, போதைப்பொருட்கள் உற்பத்தி செய்ய ரசாயனங்கள் திருப்பிவிடப்படுவதை தடுக்கும் வகையில் கண்டிப்பான நடத்தை விதிமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடத்தி இதற்கான விதிமுறையை உருவாக்கி வருகிறது. அந்த செயல்பாடுகளில், ரசாயன உற்பத்தியாளர்கள், மருந்து நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் அங்கம் வகிப்பார்கள்.
புதிய விதிமுறையின்படி, ரசாயனங்கள் அனுப்புவதை கண்காணித்தல், வாங்குபவர்களின் விவரங்களை சரிபார்த்தல், குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை தணிக்கை செய்தல் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து தகவல் அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஹைட்ரோகுளோரிக் அமிலம், அசிட்டோன், சூடோஎபெட்ரின், சோடியம் ஹைட்ராக்சைடு, எத்தனால், டோலுயீன், சிவப்பு பாஸ் பரஸ் உள்ளிட்ட ரசாயனங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது.