தேசிய செய்திகள்

ரெயில்வே முன்பதிவு டிக்கெட்டுடன் பயண காப்பீடு தேர்வு செய்வோருக்கு புதிய கட்டுப்பாடு!

தொலைதூர ரெயில் பயணத்துக்கான முன்பதிவு டிக்கெட்டுடன், பயணிகள் விருப்பத்தின்படி பயண காப்பீட்டையும் தேர்வு செய்யலாம்.

புதுடெல்லி,

ரெயில்வே முன்பதிவு கவுன்டர்களில் டிக்கெட் வாங்கும் பயணிகள், விருப்பத்தின்படி பயண காப்பீட்டை தேர்வு செய்தால், டிக்கெட்டுக்கான முழு தொகையையும் டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தொலைதூர ரெயில் பயணத்துக்கான முன்பதிவு டிக்கெட்டுடன், பயணிகள் விருப்பத்தின்படி பயண காப்பீட்டையும் தேர்வு செய்யலாம். இதற்கு பிரீமியமாக 45 பைசா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில்லறை பிரச்சினை

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், காப்பீட்டு பிரீமியத்துடன் சேர்த்து டிக்கெட் கட்டணத்தையும் டிஜிட்டல் முறையில் செலுத்துகின்றனர். ஆனால், ரெயில் நிலைய முன்பதிவு கவுன்டர்களில் நேரடியாக டிக்கெட் வாங்குவோரிடம் 45 பைசா காப்பீட்டு பிரீமியத்தை வசூலிப்பதில் சில்லறை பிரச்சினை ஏற்பட்டது.

தற்போது 5, 10, 25, 50 பைசா நாணயங்கள் புழக்கத்தில் இல்லாததால், இந்தத் தொகையை கழித்துக் கணக்கிட்டு மீதிப் பணத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

புதிய உத்தரவு

இதையடுத்து, பயண காப்பீட்டை விருப்பத்தின்படி தேர்வு செய்யும் பயணிகள், டிக்கெட்டுக்கான முழுத் தொகையையும் டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த அக்டோபர் 6-ந்தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வசதி நேரடி டிக்கெட் முன்பதிவு கவுன்டர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT