புதுடெல்லி,
இந்தியாவில் வாட்ஸ் அப் வெப் பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக் கருதி, வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவோர் ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் ஒருமுறை தானாகவே லாக்-அவுட் செய்யப்படுவார்கள் எனவும், பயனர்கள் மீண்டும் க்யூஆர் கோடு மூலம் லாக்-இன் செய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. இது மார்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்
தொலைத்தொடர்புத் துறையின் புதிய 'சிம் பைண்டிங்' விதிகளின்படி, பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு மொபைலில் இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப் செயல்படும் எனவும் சிம் கார்டு அகற்றப்பட்டாலோ அல்லது செயலிழந்தாலோ வாட்ஸ்அப் சேவை உடனடியாகத் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, ‘ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க 6 மணிநேர லாக்-அவுட் விதி அவசியமானது. வணிக வசதிகளை விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம். நாளைக்குள் அனைத்து நிறுவனங்களும் இதைச் செயல்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.