தேசிய செய்திகள்

மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு மருத்துவ செலவை திரும்ப பெற புதிய திட்டம்! - புதுச்சேரி முதல் - மந்திரி ரங்கசாமி

மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அந்தத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்-மந்திரி என். ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

மஞ்சள் நிற ரேஷன் அட்டை

புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கும் மருத்துவச் செலவைத் திரும்ப பெறுவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள்

புதுச்சேரியில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாஜீம், ஆறுமுகம், செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.