தேசிய செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் மம்தானி எதிர்ப்பு.. பாஜக எம்.பி. போலா சிங் கண்டனம்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி,

நியூயார்க் மேயர் மம்தானி எதிர்ப்பு

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி, புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மோகன் பகவத் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி உலகளாவிய அளவில் மக்களைத் தொடர்புகொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக அவரது அமெரிக்கப் பயணம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியை தடுக்க அதிகாரம் இல்லை

இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த மம்தானி, தான் இந்திய-அமெரிக்கராக மட்டுமின்றி, நிறம், இனம், மதம், நம்பிக்கை அல்லது பூர்வீகம் என எந்த வேறுபாடும் இல்லாமல் ஒவ்வொரு தனிநபரையும் சமமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார். அதேவேளையில், இது ஒரு தனியார் நிகழ்ச்சி என்பதால் அதைத் தடுக்க நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக எம்.பி. போலா சிங் கண்டனம்

இதற்கிடையே, மம்தானியின் கருத்துக்கு பாஜக எம்.பி. போலா சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து முழுமையாகத் தெரியாதவர்களே இதுபோன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆர்எஸ்எஸ் நீண்ட காலமாக சமூக சேவை மற்றும் தேசக் கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், சமூக சேவைக்கான அதன் அர்ப்பணிப்பை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது என்றும் போலா சிங் தெரிவித்துள்ளார்.