தேசிய செய்திகள்

தேனிலவுக்கு வந்த இடத்தில் புதுப்பெண் உயிரிழப்பு... கணவரிடம் போலீசார் விசாரணை

ராதா காயத்ரி குருகிராமில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

முசொரி

முசோரிக்கு தேனிலவுக்கு வந்த இடத்தில் புதுப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் ஸ்ரீசரண் (வயது 28) இவர் குருகிராமை சேர்ந்த ராதா காயத்ரியை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். ராதா காயத்ரி (வயது 27) குருகிராமில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

தேனிலவு

இந்த புதுமண தம்பதி தேனிலவு செல்ல திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 13 -ம் தேதி டெல்லியிலிருந்து உத்தரகாண்டிற்குப் புறப்பட்டனர். ரிஷிகேஷைப் பார்வையிட்ட பிறகு, அவர்கள் 14-ம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில் முசோரியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

மது அருந்துதல்

அன்று இரவு இருவரும் தங்கள் அறையில் உல்லாசமாக இருந்துவிட்டு விடிய விடிய மது அருந்தியதாகவும், அதிகாலை சுமார் 3:30 மணியளவில் உறங்க சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் காலையில் அவரது கணவர் கண்விழித்தபோது, காயத்ரி தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது மூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவர் உடனடியாக ஹோம்ஸ்டே நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராதா காயத்ரி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். புதுபெண் மரணத்திற்கான காரணத்தைத் தெளிவுபடுத்துவதற்காக, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் பரிசோதனை நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி சில மாதங்களிலேயே, 27 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஹோட்டல் அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் முசோரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.