தேசிய செய்திகள்

10-வது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்... மொரார்ஜி தேசாயின் சாதனையை சமன் செய்கிறார்!

முன்னாள் பிரதமரும், முன்னாள் நிதி மந்திரியுமான மொரார்ஜி தேசாயின் 10 பட்ஜெட்டுகள் என்ற சாதனையையும் சமன் செய்ய உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2027-2028-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

ஆலோசனைக் கூட்டங்கள்

அந்த வகையில், 2027-2028-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புக்கான முன்கூட் டிய ஆலோசனைக் கூட்டங்கள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நேற்று வீட்டுவசதி, நகரமயமாக்கல் மற்றும் கலாசாரத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த தேவைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

10-வது பட்ஜெட் தாக்கல்

2027-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி 2027-2028-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் ஆகும். இதுவரை அவர் 8 முழுமையான பட்ஜெட்டுகளையும், 2024-ம் ஆண்டு ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.

இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த நிதி மந்திரி என்ற சாதனையையும் அவர் ஏற்கனவே படைத்துள்ளார்.

சாதனை சமன்

தற்போது 2027-2028-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமரும், முன்னாள் நிதி மந்திரியுமான மொரார்ஜி தேசாயின் 10 பட்ஜெட்டுகள் என்ற சாதனையையும் சமன் செய்ய உள்ளார்.

SCROLL FOR NEXT