தேசிய செய்திகள்

அனைத்து மாநிலங்களிலும் பைக் டாக்சி சேவை தொடங்க நடவடிக்கை - நிதின் கட்காரி வலியுறுத்தல்

அரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பகுதியளவில் மட்டுமே அமல்படுத்தியுள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் 'ரைடு' என்ற பெயரில் நடைபெற்ற வாடகை வாகனங்கள் மற்றும் டெலிவரி சேவைகள் தொடர்பான நிகழ்ச்சி யில் நிதின் கட்காரி பேசியதாவது:-

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டு நெறிமுறைகள்-2025-ஐ வெளியிட்டது. இதன்படி, தனியார் பயன்பாட்டுக்கான மோட்டார் சைக்கிள்களையும் வாடகை அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபடுத்த மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். ஆனால் இதுவரை ராஜஸ்தான் மாநிலம் மட்டுமே இந்த வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பகுதியளவில் அமல்படுத்தியுள்ளன. எனவே, அனைத்து மாநில போக்குவரத்து ஆணையர்களையும் அழைத்து, அந்தந்த மாநிலங்களில் தனியார் மோட்டார் சைக்கிள்களை வாடகை பயண சேவைக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.

அனைத்து மாநிலங்களும் தனியார் மோட்டார் சைக்கிள்களை வாடகை பயண சேவைக்கு அனுமதித்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும்.

இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

SCROLL FOR NEXT