புதுடெல்லி
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயர்கல்வித் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நள்ளிரவு தனது போராட்டத்தை அதிகாரபூர்வமாக முடித்துக் கொண்டார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரின் முன்னிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
உண்ணாவிரதத்தை முடித்த சில மணி நேரங்களிலேயே, தனது சமூக வலைதள பக்கத்தில் காணொலி வெளியிட்ட வாங்சுக், மத்திய அரசு வழங்கிய எழுத்துப்பூர்வ உறுதிமொழியையும் பகிர்ந்துள்ளார்.அதில், "டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பகிர்ந்த வாங்சுக், "அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்தவித வழக்குகளும் பதிவு செய்யப்படாது என்று அரசு உறுதி அளித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு உறுதிமொழிகளையும் வழங்கியுள்ளது. அதன்படி, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும்; தேர்வு முறையில் தேவையான கல்வி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்; நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து அரசு சாதகமான பரிசீலனையில் உள்ளது” உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 4 மணி நேர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் முக்கிய திருப்புமுனையாக அமைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று நடைபெற்ற இந்த நீண்ட ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி. நட்டா மற்றும் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததோடு, நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்த சூழலில், அவரது கோரிக்கைகள் குறித்து அரசின் நிலைப்பாடு மற்றும் உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, வாங்சுக் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து அரசின் சார்பில் சாதகமான அணுகுமுறையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் நேரில் சென்று அரசின் உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.