புதுடெல்லி,
2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி மந்திர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறி வருவதாக கூறிய நிர்மலா சீதாராமன, பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வரும். திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் இறுதிக்கு பதிலாக மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்படும்.
தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை. சாதாரண மக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும். எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி தாக்கல் படிவம் விரைவில் வெளியிடப்படும்.
மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வரி (TCS-Tax Collected at Source) 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.
ஜூலை 31-ந்தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை தொடரும். வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துகளின் வரி குறைக்கப்படும்.”
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.