அமைச்சர் ஜே.பி.நட்டா  
தேசிய செய்திகள்

இந்தியாவில் எபோலா பாதிப்பு இல்லை: மக்களவையில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தகவல்

பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அரசு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா உறுதியளித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் இதுவரை எபோலா வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா மக்களவையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

தீவிர கண்காணிப்பில் சர்வதேச பயணிகள்

உலக சுகாதார நிறுவனம் எபோலா பரவலை சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி கடந்த மே 23 முதல் ஜூலை 28 வரை பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்த 10,974 பயணிகள் விமான நிலையங்களில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மீது கூடுதல் கண்காணிப்பு செலுத்தப்படுகிறது. சர்வதேச பயணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை என்றாலும், கடந்த 21 நாட்களில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றவர்கள் தனித்துக் கண்காணிக்கப்படுகிறார்கள்.

விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

'ஏர் சுவிதா 2.0' தளம் மற்றும் சுய-பிரகடன படிவங்கள் மூலம் பயணிகளின் உடல்நிலை மற்றும் பயண விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் அதிரடி உத்தரவு

மத்திய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய அமைப்புகள் முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிலையான இயக்க நடைமுறைகள் அனுப்பப்பட்டு, மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அரசு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா உறுதியளித்துள்ளார்.