புதுடெல்லி,
இந்திய தேர்தல் ஆணையாளர் பதவி விலகக்கோரிய விவகாரத்தில் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எனினும், உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து அவர் பதவி விலகக்கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், மராட்டியத்தின் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று, ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தின.
இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பஸ் ஒன்றில் புறப்பட்டு டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி சென்றனர்.
எனினும், அவர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பின்னர் பஸ்சில் இருந்து இறங்கினர். இதனால், போலீசாருக்கும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து எதிர்க்கட்சியினர் அந்த பகுதியிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய ஆன்மாவின் மீதும், இந்திய ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்படும் தடியடி இது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் அனுமதியின்றி ஆகாஷ்வானி பவன் வளாகத்திற்குள் நுழைந்ததாக கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும், எவ்வளவுதான் எங்களை அச்சுறுத்த முயன்றாலும், நாங்கள் பயப்படக்கூடியவர்கள் அல்ல. நாங்கள் சிரித்துக்கொண்டே முன்னேறிச் செல்வோம். போராட்டத்தைத் தொடர்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.