காந்திநகர்,
குஜராத் மாநிலம் சபர்மதி ரெயில் நிலையத்தில் இருந்து நாட்டின் முதல் எல்.என்.ஜி.(LNG) ரெயிலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது, ரூ.1,500 கோடி மதிப்பிலான முக்கிய ரெயில்வே திட்டங்களை அமித்ஷா நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது;-
“2014-க்கு முன்பு இந்த நாடு ஒரே குடும்பத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. நான் ரெயில்வே துறை பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். சரக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக வழித்தடம்(Dedicated Freight Corridor), அதிவேக ரெயில் அமைப்பு மற்றும் உயர்தர ரெயில் நிலையங்கள் என அனைத்தையும் பிரதமர் மோடிதான் தொடங்கி வைத்தார். மேலும், ஹைட்ரஜனில் இயங்கும் ரெயிலை அறிமுகப்படுத்திய உலகின் 4 நாடுகளில் ஒன்றாக இந்தியாவை அவர் நிலைநிறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் அர்த்தமற்ற விஷயங்களைப் பேசுகிறார்கள். புள்ளிவிவரங்களுடன் விவாதிக்குமாறு நாட்டு மக்கள் அவர்களிடம்
கேட்க வேண்டும். 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் மற்றும் ஊழல்களைத் தவிர, காங்கிரஸ் வேறு எதையும் செய்யவில்லை. ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி மீது மிகச்சிறிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டைக் கூட யாராலும் கூற முடியவில்லை.
2014-இல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ரெயில்வே துறையில் பல்வேறு புதிய வசதிகளைக் கொண்டுவந்து அதனை நவீனப்படுத்தியுள்ளார். மோடி அரசின் கீழ், 11,000 கி.மீ. நீளமுள்ள ரெயில் வழித்தடம் 4 வழித்தடங்களைக் கொண்ட வலையமைப்பாக மாற்றப்பட்டு வருகிறது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணத்தை மிகவும் வசதியானதாக மாற்றும்.
பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் ரெயில்களில் 97 சதவீத உயிரியல் கழிப்பறைகள் (bio-toilets) பொருத்தப்பட்டன. அதேவேளையில், 87 சதவீத எல்.பி.எச். (LBH) பெட்டிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. மோடியின் ஆட்சிக்காலத்தில் ரெயில்வே மின்மயமாக்கல் 70 சதவீதமாகவும், ரெயில்வே பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு 67 சதவீதமாகவும், ரெயில் என்ஜின் உற்பத்தித் திறன் 66 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
'மேக் இன் இந்தியா' (Make in India) மற்றும் 'சுயசார்பு இந்தியா' (Self-reliant India) ஆகிய கொள்கைகளை மோடி வலுப்படுத்தினார். அதன் விளைவே இதுவாகும். 2015-16 ஆம் ஆண்டில், ரெயில்வே துறை 293 கோடி லிட்டர் டீசலை பயன்படுத்தியது. 2024-25 ஆம் ஆண்டிற்குள் இது 108 கோடி லிட்டராகக் குறையும், மேலும் 2030-க்குள் இது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதன் மூலம் நாம் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துவோம். இது மக்களின் கவனத்திற்கு வராத ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.