டி.கே.சிவக்குமார் 
தேசிய செய்திகள்

மேகதாது அணை கட்ட யாரிடமும் அனுமதி தேவையில்லை: டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

மேகதாது அணை கட்டப்படுவதால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கே அதிக பலன் கிடைக்கும் என்று டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு உள்பட யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு கடிதம்

தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து காவிரி நீர் கிடைத்திடவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை கட்டும் இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் அண்மையில் பார்வையிட்டது சரியல்ல என தெரிவித்தும், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியையும் வழங்க கூடாது என வலியுறுத்தியும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், அந்த கடிதம் குறித்து பெங்களூருவில் இன்று டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டத்தை நன்கு அறிந்திருப்பார்

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் நாட்டின் சட்டத்தை நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. கர்நாடகா தனது சொந்த நிலத்தில் அணையை கட்டிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. அதேநேரத்தில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 177 டி.எம்.சி. காவிரி நீரை தவறாமல் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையை மட்டுமே நீதிமன்றம் விதித்துள்ளது. அந்த நிபந்தனையை நிறைவேற்ற நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ்நாட்டுக்கே அதிக பலன் மேகதாது அணை கட்டப்படுவதால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கே அதிக பலன் கிடைக்கும். வறட்சி காலங்களில் நீரை சேமித்து பகிர்ந்துகொள்ளும் சமநிலை நீர்த்தேக்கமாக இது செயல்படும். இந்த திட்டத்திற்காக வனத்துறை நிலத்திற்கு மாற்றாக 5,400 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

குழுவை அனுப்ப வேண்டும்

இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, மோதல் போக்கை கைவிட்டு இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேகதாது திட்டத்தை நாங்கள் ஒருபோதும் தவறாக பயன்படுத்த மாட்டோம். இதுகுறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் ஒரு குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

SCROLL FOR NEXT