அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் கார் டிரைவர் உள்பட 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு உத்தவ் சிவசேனா சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 கோடி நன்கொடைக்கு இதுவரை ரசீது வழங்கப்படவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இது குறித்து மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டபோது, எங்கள் கட்சி சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினோம். அதுமட்டுமின்றி, முதன்முதலாக 25 கிலோவிற்கும் அதிக எடையுள்ள ஒரு வெள்ளி செங்கலையும் நன்கொடையாக வழங்கினோம். ஆனால், நாங்கள் கொடுத்த ரூ.1 கோடி பணத்திற்கான ரசீதை அறக்கட்டளை இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை.
ராமஜென்ம பூமி அறக்கட்டளையால் முறைகேடு செய்யப்பட்ட பணம், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறைகேட்டில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் மற்றும் உள்ளூர் பா.ஜனதா நிர்வாகிகளை காப்பாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இவர்கள் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி, அதை அறக்கட்டளைக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்துள்ளனர்.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.