தேசிய செய்திகள்

அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு.. எங்கு தெரியுமா..?

மாநிலத்தின் 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடவிருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23, 29 ஆகிய தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில் மம்தா பானர்ஜி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தேர்தல் பணிகளில் பிற கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், மாநிலத்தின் 294 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து போட்டியிடவிருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. டெல்லியில் மேற்கு வங்காளத்தின் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற காங்கிரசின் தேர்தல் குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் மேற்கு வங்காள காங்கிரசின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது, மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிராக 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மேற்கு வங்க மாநிலத்துக்கான காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் கூறுகையில், “ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது. ஒரு முழுமையான போட்டியை எதிர்கொள்ள உள்ளோம். பவானிபூரில் நிச்சயமாக வலிமை வாய்ந்தவர்தான் போடியிடுவார். எந்த இடத்தையும் காலியாக விடுவதாய் இல்லை. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும்.

294 இடங்களுக்கு சுமார் 2500 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றை ஆய்வு செய்த பிறகு, இன்று உயர்மட்ட மன்றத்தில் நடைபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. எங்கள் தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பங்களுக்கு இணங்க, எங்கள் வேட்பாளர்கள் அனைத்து 294 இடங்களிலும் போட்டியிடுவார்கள்” என்று கூறினார்.

மேற்கு வங்க முதல்-மந்திரி மமதா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் சார்பாக பவானிபூரில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.