தேசிய செய்திகள்

வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை: பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் பேட்டி

போர் சூழலால் ஹார்முஸ் ஜல சந்தி கடல்வழி பாதையை ஈரான் மூடியுள்ளது.

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் தீவிரம் அடைந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜல சந்தி கடல்வழி பாதையை ஈரான் மூடியது. இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்கு 20 சதவீதம் கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறு கிறது. இந்தியாவுக்கு பெருமளவு இந்தப்பாதை வழியாகத்தான் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது.

இதனால் எரிபொருள் தட்டுப்பாடு இந்தியாவில் எதிரொலித்தது. தற் போது நாட்டின் முக்கிய பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு மாறி உள்ளது. இது மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாடுமுழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா கூறியதாவது:-

வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் நாடு முழுவதும் எந்த தட்டுப்பாடும் இல்லை. வதந்திகளை நம்பி தேவையற்ற அச்சத்துடன் சிலிண்டர் வாங்க குவிய வேண்டாம். வீடுகளுக்கு எந்த தடையுமின்றி வழக்கம்போல் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

சிலிண்டர் விநியோகத்தில் மாநில அரசுகளுக்கு அதிகாரம். குறிப்பிட்ட துறை அல்லது குறிப்பிட்ட பகுதிக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசு முடிவு செய்யலாம். எல்பிஜி உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விநியோகத்தை விரிவுபடுத்த பெட்ரோலியம் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.