தேசிய செய்திகள்

மும்பையில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு- நாளையும் ‘ரெட் அலர்ட்’

மும்பை சேனாபதி பப்பட் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் சென்ற கார்கள், பிற வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

மும்பை,

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மும்பையில் 12 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பெய்ததால் நகரம் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல் புறநகர் ரெயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.மும்பை மற்றும் தானே பகுதிகளில் மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் நேற்றும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. அந்தேரி, குர்லா, சகிநகா, செம்பூர், சாந்தாக்ரூஸ், போவாய் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தானே, பால்கர் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

கட்டிடம் இடிந்தது

மேலும் ரெயில் தண்டவாளங்களிலும் மழைநீர் தேங்கி இருந்தது. நலசோபரா மற்றும் விரார் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான ரெயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி காட்சியளித்தது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த மழையுடன் காற்றும் வீசியதால் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.பைகுல்லாவில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர். சோனாப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் வாகனம் உள்ளே விழுந்து விபத்துக்குள்ளானது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

வாகனங்கள் மூழ்கின

மும்பை சேனாபதி பப்பட் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் சென்ற கார்கள், பிற வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. பல இடங்களில் கார்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிய நிலையில் காணப்பட்டன.இந்த நிலையில் இன்றும், நாளையும் மும்பை மற்றும் தானே, பால்கர், ராய்கட் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. சில இடங்களில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.மும்பையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “வானிலை மைய அறிவிப்புகளை கேட்டு மக்கள் நடந்து கொள்ள வேண்டும். நாளை (6-ந்தேதி) வரை அத்தியாவசியம் இல்லாத பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.