தேசிய செய்திகள்

நாட்டு நலனுக்காக கடினமான முடிவுகளை எடுக்க அச்சப்படமாட்டோம்: பிரதமர் மோடி

நாட்டு நலனுக்காக கடினமான முடிவுகளை எடுக்க அச்சப்படமாட்டோம் என்று பிரதமர் மோடி மியான்மரில் பேசினார்.

யாங்கூன்,

மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடி, நேற்று அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது, பிரதமர் மோடி, நாட்டு நலனுக்காக எத்தகைய கடினமான முடிவுகளையும் எடுக்க தயக்கமோ அச்சமோ அடைய மாட்டோம் என்றும் பேசினார். பிரதமர் மோடி கூறுகையில், பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் எந்த அச்சமும் தயக்கமும் இன்றி எடுக்கப்பட்டது. நாட்டு நலனுக்காக எங்கள் அரசாங்கம் மிகப்பெரிய கடினமான முடிவுகளையும் எடுக்க பயப்படாது. ஏனெனில், அரசியலை விட நாட்டு நலன் மேலானது. சர்ஜிக்கல் தாக்குதலாக இருக்கட்டும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையாக இருக்கட்டும் அல்லது ஜி.எஸ்.டியாக இருக்கட்டும் அனைத்து நடவடிக்கைகளும் எந்த அச்சமும் தயக்கமும் இன்றி எடுக்கப்பட்டது என்றார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த ரிசர்வ் வங்கி அறிக்கையை முன்வைத்து, மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தனது அரசால் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி பேசும் போது, ஊழல்வாதிகளின் தவறுகளை 125 கோடி மக்கள் சுமக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியா முன்னேற்றத்தை நோக்கி செல்லும் என்று நாட்டு மக்கள் நம்ப தொடங்கி உள்ளனர். நாங்கள் சீர்திருத்தம் மட்டும் செய்யவில்லை ஆனால் இந்தியாவில் மாற்றம் கொண்டு வருகிறோம். நாங்கள் இந்தியாவை மாற்றவில்லை. புதிய இந்தியாவை கட்டமைக்கிறோம். இந்தியா தனது 75 சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022 ஆம் ஆண்டு இந்த சாதனைகள் நடைபெறுவதை இலக்காக கொண்டுள்ளோம் என்றார். பயங்கரவாதம், இனவாதம், ஊழல் ஆகியவற்றில் இருந்து இந்தியாவை மீட்பது குறித்தும் பிரதமர் மோடி தனது உரையில் பேசினார்.