நசீம் துர்ரானி 
தேசிய செய்திகள்

பிரபல தாதா என்கவுண்டரில் சுட்டுக்கொலை; தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு என அதிர்ச்சி தகவல்

நசீம் துர்ரானி மீது, கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பிரபல தாதா நசீம் துர்ரானி, போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்புடைய இவர் மீது, கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொலை வழக்கு

கடந்த 16-ம் தேதி, டெல்லியின் சோனியா விஹார் பகுதியில் சமீர் என்பவர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் நசீம் துர்ரானிக்கு தொடர்பிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

ரகசிய தகவல்

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் புலந்தஷஹர் பகுதியில் நசீம் துர்ரானி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், டெல்லி போலீசாரும், உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி சூடு

அப்போது, சிக்கந்திரா பகுதியில் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற நசீம் துர்ரானியை போலீசார் சுற்றி வளைத்தனர். பிடிபடுவதை தவிர்க்க அவர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்காப்புக்காக போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் நசீம் துர்ரானி மீது குண்டுகள் பாய்ந்தன.

கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து, நசீம் துர்ரானி பயன்படுத்திய 2 கைத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதிர்ச்சி தகவல்

இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், நிழல் உலக தாதா சோட்டா ஷகீலுடன் நசீம் துர்ரானிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், கடந்த 2016-17-ம் ஆண்டு காலகட்டத்தில், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோட்டா ராஜனை கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தை நசீம் துர்ரானியிடம் சோட்டா ஷகீல் வழங்கியிருந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT