தேசிய செய்திகள்

முப்படைகளின் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, ராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

புதுடெல்லி,

நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், போர்க்காலங்களில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட பதவிதான், முப்படை தலைமை தளபதி ஆகும்.

முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் இருந்தார் (2020 - 2021). இவர் துரதிருஷ்டவசமாக 2021ஆம் டிசம்பரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அடுத்து 2வது முப்படை தலைமை தளபதியாக 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அன்று ஜெனரல் அனில் சவுகான் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகிற 30-ம் தேதி அன்று நிறைவடைகிறது.

இந்த நிலையில், நாட்டின் 3வது முப்படைகளின் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி என்பவரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, நாட்டின் ராணுவ சேவையில் சுமார் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1985ஆம் ஆண்டில் கார்வால் ரைபிள்ஸ் படையில் அதிகாரியாக பணியாற்றினார். அதற்கு அவர் ராணுவத் துணை தளபதியாக பணியாற்றினார். உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள மத்திய ராணுவக் கட்டளை தளபதியாகவும் பணியாற்றினார்.

அதேபோல வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் அடுத்த கடற்படைத் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.