புதுடெல்லி,
போட்ஸ்வானாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கிப்புலி வனப்பகுதியில் 4 குட்டிகளை ஈன்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சிவிங்கிப்புலிகளின் மொத்த எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் 'சிவிங்கிப்புலிகள் திட்டத்தின்' கீழ், ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவிலிருந்து 'கோம்ஜி 3' என்ற இரண்டரை வயதுடைய பெண் சிவிங்கிப்புலி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. வனப்பகுதியின் இயற்கையான சூழலில் 4 மாதங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்த இந்த சிவிங்கிப்புலி, இன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்த தகவலை மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தனது சமூக வலைதளமான 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சிவிங்கிப்புலிகள் திட்டத்தின் கீழ், போட்ஸ்வானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கிப்புலி ஒன்று குட்டிகளை ஈன்றிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், 2022-ம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, திறந்தவெளி வனப்பகுதியில் சிவிங்கிப்புலி குட்டிகளை ஈன்றிருப்பது இது 2-வது முறையாகும்.
இந்த 4 குட்டிகளின் பிறப்புடன், இந்தியாவில் உள்ள சிவிங்கிப்புலிகளின் மொத்த எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. இதில் 43 சிவிங்கிப்புலிகள் இந்திய மண்ணில் பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இது சிவிங்கிப்புலிகள் திட்டத்தின் மிக முக்கியமான சாதனையாகும்."
மேலும், இத்திட்டத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் வல்லுநர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு மந்திரி பூபேந்தர் யாதவ் தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.