யுஜிசி 
தேசிய செய்திகள்

இந்தியாவில் போலி பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு: மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா 2 போலிப் பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 20-லிருந்து 32 ஆக அதிகரித்துள்ளதாகவும், அதில் 18 பழைய நிறுவனங்கள் இன்னும் பட்டியலில் நீடிப்பதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாநில வாரியான விவரங்கள்:-

• நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 8 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன (2023-ல் இருந்த அதே 8 நிறுவனங்கள் இன்றும் தொடர்கின்றன).

• உத்தர பிரதேசத்தில் 4 போலிப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

• தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா 2 போலிப் பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

• கர்நாடகாவில் உள்ள 'சர்வ பாரதிய சிக்ஷா பீடம்' மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள 'நேஷனல் பேக்வார்ட் கிருஷி வித்யாபீடம்' ஆகியவை அங்கீகாரம் பெறாத போலி நிறுவனங்கள் ஆகும்.

சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் இல்லை

இந்த போலிப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் எதற்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது. இவற்றைக் கொண்டு மேற்படிப்பிற்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ விண்ணப்பிக்க முடியாது.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

யுஜிசி சட்டவிதிகளை மீறும் இத்தகைய போலி கல்வி நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்து, அவற்றை மூடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

எனவே, மாணவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதள தகவல்களை நம்பி ஏமாறாமல், கட்டணம் செலுத்தும் முன்பு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு பட்டம் வழங்கும் அதிகாரம் மற்றும் யுஜிசி அங்கீகாரம் உள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT