கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரை கொன்ற செவிலியர் தற்கொலை

விடுதியில் அறையில் விஷ ஊசி செலுத்தி கொண்டு செவிலியர் தற்கொலை செய்து கொண்டார்.

ஐதராபாத்,

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த செவிலியர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் எதிர்ப்பு

தெலுங்கானா மாநிலம், விகாரபாத் மாவட்டம், பந்த்வாரம் அடுத்த யச்சாரத்தை சேர்ந்தவர் சுரேகா. இவர் சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தார். வேலைக்குச் சென்று வரும்போது வாலிபர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். காதலனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த சுரேகா இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

விஷ ஊசி செலுத்தி கொலை

காதல் திருமணத்திற்கு சாத்தியம் இல்லை என அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனை கேட்ட சுரேகாவுக்கு பெற்றோர் மீது வெறுப்பு ஏற்பட்டது. காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை கொலை செய்துவிட்டு, காதலனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்தபோது, சுரேகா இருவருக்கும் விஷ ஊசி செலுத்தினார். சிறிது நேரத்தில் சுரேகாவின் பெற்றோர் பரிதாபமாக இறந்தனர். பின்னர் உடல்நலக்குறைவால் பெற்றோர் இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார்.

சிறையில் அடைப்பு

அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்நிலை சரியில்லாமல் ஒரே நேரத்தில் எப்படி இருவரும் இறந்தார்கள் என சந்தேகம் அடைந்தனர். சந்தேகத்தின் பேரில் சுரேகாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சுரேகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விடுதியில் தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேகா சிறையில் இருந்து ஜாமினில் வெளிய வந்தார். சங்கரெட்டிக்கு வந்த சுரேகா சாந்தி நகரில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார். அங்கு அவர் விஷ ஊசி செலுத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று நீண்ட நேரமாகியும் அறை திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அறையில் சுரேகா பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.