தேசிய செய்திகள்

வேலைக்கு சென்றபோது மாயமான நர்சு பம்பை ஆற்றில் பிணமாக மீட்பு

ஆலப்புழா அருகே வேலைக்கு சென்றபோது மாயமான நர்சு 6 நாட்களுக்கு பிறகு பம்பை ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

ஆலப்புழா அருகே வேலைக்கு சென்றபோது மாயமான நர்சு 6 நாட்களுக்கு பிறகு பம்பை ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் சாவில் மர்மம் இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே மாவேலிக்கரையை சேர்ந்தவர் ரஞ்சு. இவருடைய மனைவி தன்யா (வயது 29). இந்த தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். தன்யா திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி மாலையில் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்ட தன்யாவை அவரது கணவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பஸ் நிலையத்தில் விட்டு வந்தார். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை என இரவு 11.30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து ரஞ்சுக்கு போன் வந்தது.

உடனே அவர் மனைவியின் செல்போனை தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ரஞ்சு, மாவேலிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான தன்யாவை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே புளிக் கீழ் பகுதியில் பம்பை ஆற்றில் இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். பின்னர் நடத்திய விசாரணையில், அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பெண் தன்யா என்பது உறுதியானது. தன்யாவை தாக்கி யாரேனும் ஆற்றில் தூக்கி வீசினார்களா? அல்லது தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT