புதுடெல்லி:
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் துறையில் பணியாற்றுவோரின் பிள்ளைகளை நீக்க, அந்தப் பிள்ளைகளின் பெற்றோா் ஈட்டும் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி செய்துள்ளது.
ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் மற்றும் கிரீமி லேயர் அல்லாதவர்கள் என பிரிப்பதற்கு பெற்றோரின் பணிநிலை, அவர்கள் வகிக்கும் பதவி ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கடந்த மார்ச் 11-ந்தேதி தீர்ப்பளித்திருந்தது.இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக கூறி மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பை அமல்படுத்துவதில் தாமதம் செய்வதற்கு போதிய காரணங்கள் இல்லை என்று தெரிவித்தது. அதேநேரத்தில், தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு மேலும் 2 மாதங்கள் அவகாசம் வழங்கியது.
இந்த உத்தரவால் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கிரீமி லேயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி சான்றிதழ்கள் நிராகரிக்கப்பட்ட சுமார் 100 ஓபிசி தேர்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. குறிப்பாக, 2025-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 958 பேருக்கும், இந்திய வனப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 148 பேருக்கும் பணி ஒதுக்கீடு, பயிற்சி உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொள்வதற்கான வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவை தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு இந்த வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை.அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் பணிநிலை முக்கியமாகக் கருதப்படுகிறது. அதேபோல், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெற்றோரின் சம்பளத்தை மட்டும் வைத்து அவர்களின் குழந்தைகளை கிரீமி லேயர் பிரிவில் சேர்க்கக் கூடாது என்பதே சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தீர்ப்பின் முக்கிய அம்சமாகும். மேலும், இடஒதுக்கீடு தொடர்பான கொள்கைகளை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு வகுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது