தேசிய செய்திகள்

ஒடிசாவில் ‘கே.ஜி. முதல் பி.ஜி.’ வரை இலவச கல்வி வழங்கும் திட்டம் - மந்திரிசபை ஒப்புதல்

இலவச கல்வி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 32 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் 8-ம் வகுப்பு வரை இலவசக்கல்வி அமலில் இருக்கிறது. இதை முதுகலை பட்டப்படிப்பு(பி.ஜி.) வரை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி இதை தெரிவித்தார்.

கே.ஜி. முதல் பி.ஜி. வரை

அதன்படி, நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டு முதலே, மாநிலத்தில் கே.ஜி. முதல் பி.ஜி.(முதுகலை பட்டப்படிப்பு) வரை இலவச கல்வி அளிக்கப்படும் எனக்கூறிய அவர், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் இது அமலுக்கு வருவதாக கூறினார்.

அதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களையும், அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடரும் மாணவர்களையும் உள்ளடக்கும் என்றும் தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல் முறை

ஒடிசா அரசின் இந்த நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்கது எனவும், நாட்டிலேயே முதல் முறையாக அமலாகிறது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த முதல் ஆண்டில் ரூ. 895.57 கோடியும், 5 ஆண்டுகளில் ரூ. 5,467.55 கோடியும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 32 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.