புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் கேந்திரபரா மாவட்டத்தில் உள்ள உலவார் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், 7-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம், பள்ளியில் சிலர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வருவதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து சிறுமியிடம் விரிவாக கேட்டபோது, இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சந்தன் குமார்(37), பிஸ்வா ரஞ்சன்(31), ராஷ்மி பிஸ்வால்(47), மினாடி பாய்(34) மற்றும் பள்ளி ஊழியர் ராஷ்மி ரஞ்சன் ராணா(32) ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும், மனநல ஆலோசனையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.