தேசிய செய்திகள்

ஒடிசாவில் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி முட்டைகளால் தாக்கப்பட்டதால் பரபரப்பு

ஒடிசாவில் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி ஜூவல் ஓரம் முட்டைகளால் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் ராஜ்கனிகா பகுதியில், 'சப்கா சாத் சப்கா விகாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க பழங்குடியின நலத்துறை மந்திரி ஜூவல் ஓரம் காரில் சென்றார். அப்போது மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி ஜூவல் ஓரம் சென்ற கார் மீது இன்று சிலர் முட்டைகள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் மந்திரிக்கு எதிராக கருப்பு கொடியையும் காட்டிஉள்ளனர். மூன்று முட்டைகள் அமைச்சர் சென்ற கார் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக பேலீசார் விரைந்து சென்று எதிர்ப்பாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ள மந்திரி ஜுவல் ஓரம், ஆளும் பிஜு ஜனதா தளத்தினர், பழங்குடியினத்தவருக்கு எதிரான மனநிலையில் உள்ளது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டு உள்ளார். அம்மாநில பா.ஜனதா தலைவர் சுகந்த் திவிவேதி பேசுகையில் ''மத்தியில் பிரதமர் மேடி தலைமையிலான அரசு சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறது. மாநிலத்தில் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு வளர்வதால் பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பா.ஜனதாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், பாரதீய ஜனதாவின் நலத்திட்டங்களை தடுக்க இதுபேன்ற செயல்களில் அக்கட்சிகள் ஈடுபடுகின்றன, என கூறிஉள்ளார்.

புவனேஷ்வரில் கடந்த 10-ம் தேதி மத்திய அமைச்சர் ராதா மேகன் சிங் காரில் சென்ற பேது இளைஞர் காங்கிரசார் சிலர் முட்டைகள் வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஜெய் பாண்டா மீது சொந்த கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவளார்கள் முட்டைகளை வீசினர்.