புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் கிராமத்துக்குள் புகுந்த 15 அடி நீள ராட்சத முதலையை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக பிடித்தனர். முதலை பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் பக்ககஹான் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த பகுதிக்குள் திடீரென ராட்சத முதலை ஒன்று புகுந்தது. அங்குள்ள ஒரு கால்நடை தொழுவத்திற்குள் முதலை நுழைவதை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் துணிச்சலுடன் திரண்ட பொதுமக்கள், அந்த முதலையை விரட்ட முயன்றனர். அப்போது அங்கிங்குக் நகர்ந்த அந்த ராட்சத முதலை, அருகிலிருந்த ஒரு குளத்திற்குள் சென்று பதுங்கிக்கொண்டது.
இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கிராம மக்களின் உதவியுடன் குளத்தை வளைத்து நின்றனர். பின்னர் குளம் முழுவதும் வலைவீசி தேடிய வனத்துறையினர், சுமார் 15 அடி நீளமுள்ள அந்த ராட்சத முதலையை வெற்றிகரமாக பிடித்தனர்.
பிடிபட்ட ராட்சத முதலையின் வாய் மற்றும் கால்கள் கட்டப்பட்டன. எடை அதிகமாக இருந்ததால், கிராமத்தினர் பலர் சேர்ந்து அந்த முதலையைத் தூக்கிச் சென்றனர். இந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி, தற்போது வைரலாக பரவி வருகிறது.
பத்திரமாக மீட்கப்பட்ட அந்த ராட்சத முதலை, பின்னர் அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற பிதர்கனிகா தேசிய பூங்கா பகுதியின் கால்வாயில் கொண்டு போய் விடப்பட்டது. முதலை பிடிபட்டதை தொடர்ந்து பக்ககஹான் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.