புதுடெல்லி,
கச்சா எண்ணெய் விலை உயர்வை ஒப்பிடும்போது சில்லறை எரிபொருள் விலைகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோலை லிட்டருக்கு ரூ.14 மற்றும் டீசலை ரூ.18 இழப்பில் விற்பனை செய்து வருகின்றன.
மேலும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பிரச்சினைக்கு பிந்தைய அதிகரித்த கச்சா எண்ணெய் விலைகள் காரணமாக, நடப்பு நிதியாண்டில் சமையல் கியாஸ் விற்பனையில் ரூ.80,000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படும் எனவும், உர மானியம் ரூ.2.25 லட்சம் கோடி வரை உயரக்கூடும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பிரபல தனியார் நிதி மதிப்பீடு நிறுவனமான ஐக்ரா (இந்தியா கடன் மதிப்பீடு ஏஜென்சி) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஐக்ரா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பிரசாந்த் வசிஷ்ட் கூறுகையில், "கச்சா எண்ணெய் விலை உயர்விலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருட்களின் சில்லறை விலை நிலையாக வைத்திருப்பது.
எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திறனை பாதிக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலில் முறையே லிட்டருக்கு ரூ.14 மற்றும் ரூ.18 அளவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும்," என்றார்.
ஐக்ரா மதிப்பீட்டுப்படி, தற்போதைய நிலை தொடர்ந்தால் நடப்பு நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கான மொத்த இழப்பீடு தொகை ரூ.80 ஆயிரம் கோடியை எட்டக்கூடும். அதேபோல், உர மானியம் ரூ.2.25 லட்சம் கோடியாக உயரக்கூடும். இது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.1.71 லட்சம் கோடியை விட அதிகமாகும்.
உரத் துறையிலும் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சல்பர், அமோனியா மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்ததால், 2026 ஏப்ரலில் யூரியா விலை உயர்ந்துள்ளது. மொத்தத்தில், எரிசக்தி மற்றும் உள்ளீட்டு செலவுகள் பல துறைகளின் லாபத்தை குறைத்து, சில நிறுவனங்களின் கடன் நிலையை பலவீனப்படுத்தக்கூடும் என ஐக்ரா தெரிவித்துள்ளது.