தேசிய செய்திகள்

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்து வந்தநிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

புதுச்சேரி,

5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டு உத்தரவிட்டது. புதுவை முத்திரையர்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 66). தொழிலாளி. இவர் 5 வயது சிறுமியிடம், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அந்தோணிராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட அந்தோணிராஜுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் ரூ.10 ஆயிரம் அபராத மும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வக்கீல் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினார்.