தேசிய செய்திகள்

மூத்த தம்பதியை கட்டி போட்டு, பணம், நகை கொள்ளை; நேபாள கும்பல் மீண்டும் கைவரிசை

வழக்கு பதிவு செய்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த நேபாள கும்பலை தேடி வருகின்றனர்.

ஐதராபாத்

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மூத்த தம்பதியின் வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். 20 நாட்களாக அந்த வீட்டில் நன்றாக பழகியுள்ளார். அவருடைய கணவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பிறந்த நாள் கொண்டாட போகிறோம் என கூறி வீட்டில் அதற்கான ஏற்பாடுகளை அந்த நேபாள பெண் செய்துள்ளார். அந்த தம்பதியும் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நேபாள பெண்ணின் கூட்டாளிகள் என 6 பேர் வரை வந்துள்ளனர். இந்த நிலையில், நள்ளிரவு ஆனதும் அந்த தம்பதியை அவர்கள் 8 பேரும், அறையில் தள்ளி கயிற்றால் கட்டி போட்டுள்ளனர். அவர்கள், ஒன்றும் செய்து விட வேண்டாம் என்று வேண்டுகோளாக கேட்டு கொண்டனர்.

ஆனால் அவர்களுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளனர். இதனால், அந்த தம்பதி சுயநினைவற்று போயுள்ளனர். இதன்பின்னர், வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி, ரூ.16.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, இரு சக்கர வாகனம் ஒன்றை எடுத்து கொண்டு தப்பி விட்டனர்.

நேற்று மதியம் வயது மூத்த அந்த பெண்மணி மயக்கம் தெளிந்து அறையின் ஜன்னல் வழியே, வெளியே பார்த்து, கத்தி, கூச்சலிட்டு உள்ளார். இதனை கவனித்த அந்த வழியே சென்ற நபர்களில் ஒருவர் போலீசிடம் தெரிவித்து உள்ளார். போலீசார் வந்து அவர்களை மீட்டனர்.

இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த நேபாள கும்பலை தேடி வருகின்றனர். கடந்த 8-ந்தேதி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி தனுஜா (வயது 62) என்பவரை நேபாள கும்பல் ஒன்று, பணிப்பெண் கல்பனா உதவியுடன் படுகொலை செய்தது. வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது. இந்த நிலையில், 2-வது முறையாக நேபாள கும்பல் தெலுங்கானாவில் கைவரிசையை காட்டியுள்ளது.