தேசிய செய்திகள்

வங்காளதேசத்தில் புதிய பிரதமர் பதவியேற்பு விழா : இந்தியா சார்பில் ஓம் பிர்லா பங்கேற்பு

தாரிக் ரகுமான் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு தலைநகர் டாக்காவில் நடக்கிறது.

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா அரசு கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.அங்கு புதிய அரசை தேர்ந்தெடுக்க கடந்த 12-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டி யிட தடை விதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற் றது. மொத்தமுள்ள 297 இடங்களில், 207 தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றியது.

வலதுசாரி கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங் களை பெற்றது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரகுமான் (வயது 60) புதிய பிரதம ராக பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு தலைநகர் டாக்காவில் நடக்கிறது.

வங்காளதேச நாடாளுமன்றத் தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தாரிக் ரகுமானுக்கு, வங்காளதேச ஜனாதிபதி முகமது சகாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அத்துடன் புதிய மந்திரிகளுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தியா சார்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா செல்கிறார்.