புதுடெல்லி
திரிபுராவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது பதட்டத்தை அதிகரித்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. லெனின் சிலை அகற்றப்பட்டதை பா.ஜனதா தலைவர்கள் பலர் நியாயப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சியினர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பதிவில், லெனின் யார், அவருக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று.
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்) என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆங்காங்கே எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார்.
முன்னதாக திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதற்கும், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேஸ்புக் பதிவிற்கும் பிரதமர் மோடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தற்போது பாரதீய ஜனதா கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதில் பா.ஜ.க.வினருக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
ஒரு கட்சி என்ற முறையில், பரந்த அளவிலான கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை இந்தியாவில் இணைத்துக்கொள்ள முடியும் என்று நாங்கள் பாஜகவை நம்புகிறோம். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நம் பெரிய தேசத்தை எப்படிக் கருதினார்கள் என்பதுதான் இது.
சிலைகளை அழிப்பதில் சமீபத்திய பிரச்சினை மிகவும் துரதிர்ஷ்டமானது. யாரும் சிலைகளை சேதப்படுத்துவதில் நாங்கள் ஒரு கட்சியாக ஆதரிக்கவில்லை. மக்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதே எங்கள் முக்கிய நோக்கம். இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் எங்களது பணி மற்றும் செயல்பாடுகள் பெரிதும் பாராட்டை பெற்று உள்ளன. எங்கள் கூட்டணி அரசாங்கம் 20 மாநிலங்களில் சேவை செய்து வருகிறது.
தமிழ்நாடு மற்றும் திரிபுரா ஆகிய மாநில கட்சி தொண்டர்களுக்கும் கூறிக்கொள்கிறேன். பாஜ.க தொடர்புடைய எந்த நபரும் சிலைகளை சேதபடுத்துவதில் தொடர்பு இருப்பதாக கண்டறிந்தால் கட்சியில் இருந்து கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். என கூறி உள்ளார்.