அத்தப்பூ கோலம் 
தேசிய செய்திகள்

கேரளம் மாநிலத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை... அத்தப்பூ கோலமிட்டு மகாபலியை வரவேற்ற மக்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் வெண்ணிற ஆடைகளை அணிந்து, வீடுகளின் முன்பு பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.

கேரளம் மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை ஓணம். இதனை கேரள மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் கொண்டாடுவார்கள். மலையாள மாதமான சிங்கம் மாதம் (தமிழ் மாதம் ஆவணி) அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஓணப் பண்டிகை கடந்த 17-ந் தேதி தொடங்கியது. விழாவின் 10-வது நாளான இன்று (26.8.2026) திருவோணம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

மகாபலி சக்கரவர்த்தி

இந்த விழா உருவானதற்கு பல்வேறு புராண கதைகள் இருந்தாலும் மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறும், புராண கதையும்தான் முக்கியத்துவம் பெறுகிறது. மகாபலி மன்னன் திருவோண நன்னாளில், தான் ஆண்ட நாட்டுக்கு வருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாகத்தான் இந்த ஓணப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாகவும் ஓணப்பண்டிகையின் வரலாறு கூறுகின்றது.

ஓணம் கொண்டாட்டம்

இத்தகைய பெருமைக்குரிய ஓணப்பண்டிகையை கேரள மாநில அரசு கடந்த 24-ந் தேதி முதல் ஓணம் வார விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த நாட்களில் பாரம்பரியமான படகுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிகர நிகழ்வான ஓணம் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் வசிக்கும் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

திருவோணம் தினமான இன்று மக்கள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடைகளை அணிந்து வீடுகளின் முன்பு பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மகாபலியை வரவேற்கும் விதமாக பெண்கள் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். அத்தப்பூ கோலத்தில் தும்பை, காசி, அரளிப்பூ, தாமரை,மல்லி, கேந்தி. வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு பூக்கள் இடம்பெறுகின்றன. இதற்காக குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து கேரள வியாபாரிகள் பூக்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இவர்களின் வசதிக்காக தோவாளையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பூ வியாபாரம் நடந்தது.

ஓணம் விருந்து

ஓணம் பண்டிகையான இன்று வீடுகளில் சிறப்பு உணவு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓண சத்யா என அழைக்கப்படும் இந்த விருந்தில் அறுசுவைகளில் 64 வகையான உணவுகள் இடம்பெறுகின்றன. புத்தரிசி மாவில் அடை, அவியல், அடை பிரதமன், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிக்கறி அல்லது இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள், பால் பாயாசம், அடை பாயாசம், சிறுபருப்பு பாயாசம் என பல்வேறு வகையான உணவுகள் தயாரித்து கடவுளுக்கு படைப்பாக்ள். பின்னர் நண்பர்கள், விருந்தினர்களுடன் குடும்பமாக அமர்ந்து ஓணவிருந்தை வாழை இலையில் பரிமாறி ருசிப்பார்கள்.

மக்களை பார்ப்பதற்காக மகாபலி சக்கரவர்த்தி வருவதை சித்தரிக்கும் நிகழ்வு

மகாபலி சக்கரவர்த்தி

திருவோண நாளில் ஆண்களும், பெண்களும் பாரம்பரிய முறைப்படி புத்தாடை அணிந்து கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் வீடுகளில் தயாரிக்கப்பட்டு இருக்கும் அறுசுவை உணவை உண்டும், நண்பர்களுக்கு, விருந்தினர்களுக்கு பரிமாறியும் மகிழ்வர்.

ஓணம் நாட்களில் அவரவர் வயதுக்கு ஏற்ப ஓண ஊஞ்சல், ஓணப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளிலும், கேளிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். இந்த காட்சிகளை எல்லாம் பார்த்தபின் மகாபலி சக்கரவர்த்தி மகிழ்ச்சியுடன் மீண்டும் பாதாள உலகுக்கு செல்வதாக ஐதீகம்.