தேசிய செய்திகள்

மக்களவையில் 6-ல் ஒரு பங்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றவர்கள்: ராகுல்காந்தி கடும் தாக்கு

மக்களவைக்கு நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் 140 இடங்கள் கூட பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜ.க. மீது வாக்கு திருட்டு குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, நாடாளுமன்ற மக்களவையில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.பி.க்களில் 6-ல் ஒரு பங்கு பேர் வாக்குத்திருட்டு மூலம் வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

வாக்கு திருட்டு மூலம் சில நேரங்களில் தனிநபர்களின் இடங்களும் திருடப்படுகின்றன. மறுபுறம் ஒரு ஒட்டுமொத்த அரசும் திருடப்படுகிறது. நாடாளுமன்ற பா.ஜ.க. எம்.பி.க்கள் 240 பேரில் ஒவ்வொரு 6-வது எம்.பி.யும் வாக்கு திருட்டு மூலமே வெற்றி பெற்றிருக்கிறார்.

அவர்களை அடையாளம் காண்பது கடினமல்ல. பா.ஜ.க.வின் கூற்றுப்படி சொல்வதானால், அவர்களை 'ஊடுருவல்காரர்கள்' என்று முத்திரை குத்தலாமா? அரியானாவின் நிலை என்ன? அங்கே, ஒட்டுமொத்த அரசே ஒரு ஊடுருவல்காரர்தான். மக்களவைக்கு நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் 140 இடங்கள் கூட அந்த கட்சி வெற்றி பெற்றிருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.