அபார் என்பதும் ஆதார் போன்ற ஒரு அடையாளச் சான்றாகும். ஆதார் கார்டு போலவே 12 நம்பர்களை கொண்ட கார்டாக இந்த அபார் கார்டு வழங்கப்படுகிறது. இதனை ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை என்றும் அழைக்கிறார்கள். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் மூலம் இந்த கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். சிறார் மாணவர்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் முக்கியம். மாணவர்கள் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம் போட்டோ மற்றும் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை கொண்டு இந்த அபார் கார்டு சேவை தொடங்கப்படுகிறது. ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்படும்.
ஒரு மாணவரின் பள்ளிப்படிப்பு முதல் உயர்கல்வி வரை அனைத்து சான்றிதழ்களையும் ஒரே இடத்தில் சேமித்து வைப்பது, ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு அல்லது மற்றொரு மாநிலத்துக்கு மாறும்போது சான்றிதழ்களை காகித வடிவில் சுமந்து செல்வதை தவிர்ப்பது போன்ற வசதிகள் இதில் உள்ளன. இதன் மூலம் சான்றிதழ்கள் தொலைந்துபோகும் என்ற அச்சம் இருக்காது, அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் நேரடியாக மாணவ- மாணவிகளுக்கு சென்றடையும்,சேர்க்கை யின்போது ஆவணங்களை சரிபார்க்கும் நேரம் குறையும், அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றப்படுவதால் மோசடிகள் தவிர்க்கப்படும். https://apaar.education.gov.in/ என்ற ஆன்லைன் தளத்தில் இதற்கான விவரங்களை பதிவு செய்து பெறலாம். இதுவரை நாடு முழுவதும் 33 கோடியே 74 லட்சம் மாணவ-மாணவிகள் 'அபார் ஐ.டி.' பெற பதிவு செய்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.