மராட்டியத்தில் ஆட்டோ, டாக்சி, செயலிகள் மூலம் இயக்கப்படும் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு அடிப்படை மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்காக அரசு சார்பில் டிரை வர்களுக்கு சிறப்பு மராத்தி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இந்தநிலையில் மராத்தி மொழித்திறன் சான்றிதழ் இல்லாத டிரைவர்களி டம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடந்த 20-ந்தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் கேட்கும் மொழித்திறன் கேள்விகளுக்கு பதிலளிக்காத டிரைவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அதற்குள் மராத்தி கற்று கொள்ளாவிட்டால், டிரைவர்களின் 'பேட்ஜ்' 3 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ஹாஜி அர்வத் ஷேக் தலைமையில் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேரில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் என்னை சந்தித்து மராத்தி மொழியை கற்றுக்கொள்ள முழு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், டிரைவர்கள் பல்வேறு வயது பிரிவினராக இருப்பதாலும், பலர் பல ஆண்டுகளுக்கு முன்பே படிப்பை நிறுத்திவிட்டதாலும், குறுகிய காலத்தில் மொழியை கற்பது கடினம் என்று கூறினர். எனவே, தங்களுக்கு ஓராண்டு அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மராத்தி மொழி கற்க ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் டிரைவர்கள் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள ஏதுவாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் மற்றும் பாட புத்தகங்களும் வழங்கப்படும். அவர்களாகவே முன் வந்து மொழியை கற்க விரும்புவதால் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறினார்.அரசின் இந்த அறிவிப்பால் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பிற மொழி பேசும் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.