இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை நிறுவப்பட்டு 65-வது நிறுவன தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி நேற்று ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தளத்தில் விழா நடைபெற்றது. இதில் எல்லை காவல் படை தளபதி சத்ருஜீத் சிங் கபூர் உரையாற்றும் போது, "இந்தியாவின் மிகப்பெரிய எதிரி சீனா.
சீனாவை எதிர்கொள்ள, பாரம்பரிய போர் முறைகள் போதுமானதாக இல்லை. அருணாசலபிரதேசத்தில் உள்ள இந்திய-சீன எல்லையில் பல இடங்களில் சீன படைகளுடனான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதல்களை தொடர்ந்து சவுர்யா கமாண்டோக் கள் என்ற புதிய போர் பிரிவை இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை உருவாக்கி உள்ளது" என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட சமூக வலைதளத்தில் கூறியதாவது:-அருணாசலபிரதேசத்தில் உள்ள இந்திய நகரங்களுக்கு சீனா தொடர்ந்து மறுபெயரிட்டு வருகிறது. மேலும் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் நீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 60 ஆயிரம் மெகாவாட் அணையை கட்டி வருகிறது. 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த பிறகு, எல்லைக்குள் எந்த வாகனமும் நுழையவில்லை, யாரும் நுழையவில்லை, எந்த பகுதியும் சீனாவின் வசத்தில் இல்லை என்று கூறி, சீனாவுக்கு பிரதமர் வழங்கிய நற்சான்றிதழுக்காக இந்தியா விலை கொடுத்து கொண்டிருக்கிறது.
அருணாசலபிரதேசத்தில் சீன ராணுவத்துடன் ஏற்பட்டதாக கூறப்படும் மோதல் கள் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். தன்னைத் தானே விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் மோடியின் சீனாவுக்கான திட்டமிட்ட சலுகைகள் தொடர்கிறது” என்று கூறியுள்ளார்.