சபரிமலை,
சபரிமலை கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனில் அய்யப்பன் தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு முறையில் தினமும் 66 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 14 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்ட நாள் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இதனால் உடனடி தரிசன முன்பதிவு மூலம் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
அதே சமயத்தில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஐகோர்ட்டு அனுமதியுடன் மட்டுமே செயல்படுத்த முடியும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கூட்ட நெரிசல் மற்றும் குளறுபடிகளை தவிர்க்க குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்திற்கு பக்தர்கள் வர வேண்டும். முன்பதிவு செய்த நாளில் தரிசனத்திற்கு வர முடியாத பக்தர்கள் முன்பதிவை ரத்து செய்யுங்கள். அவ்வாறு ரத்து செய்யும் பட்சத்தில் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.