மராட்டிய அரசு 
தேசிய செய்திகள்

வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை:தொழிலாளர்கள், ஊழியர்களுக்கான புதிய ஊதிய விதிகள்- மராட்டிய அரசு அறிவிப்பு

மராட்டிய மாநிலத்தில் தொழிலாளர்கள், ஊழியர்களின் வேலை நேரத்தை வாரத்திற்கு 48 மணி நேரமாக வரையறுத்தும், புதிய ஊதிய விதிகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது.

தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பிற ஊழியர்களின் வேலை நேரம் மற்றும் ஊதிய கணக்கீடு, வாராந்திர ஓய்வு மற்றும் கூடுதல் நேர (ஓவர் டைம்) ஊதியம் ஆகியவற்றிற்கு சீரான விதிகளை அறிமுகப்படுத்தும் புதிய ஊதிய விதிகளை மாநில அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை மந்திரி ஆகாஷ் பண்ட்கர் நேற்று கூறியதாவது:-

ஊதிய சட்டம் 2019-ன் கீழ் வரும் தொழிலாளர்களின் ஊதிய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், 'மராட்டிய ஊதிய விதிகள், 2026' கடந்த 5-ந் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இது 1963-ம் ஆண்டின் பழைய குறைந்தபட்ச ஊதிய விதிகளுக்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், மாநில அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்திற்கு இந்த விதிகள் பொருந்தாது.

2 மடங்கு கூடுதல் ஊதியம்

புதிய விதிகளின்படி, தினக்கூலி பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வேலை என்பது 8 மணி நேரமாக இருக்கும். மற்ற ஊதிய பிரிவினருக்கு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் வேலை நேரம் இருக்கக்கூடாது.

நிறுவனங்கள் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வாராந்திர ஓய்வு (விடுமுறை) வழங்க வேண்டும். ஓய்வு நாளில் ஒரு தொழிலாளி வேலை செய்தால், அவ ருக்கு மாற்று விடுப்பு வழங்க வேண்டும். வாராந்திர ஓய்வு நாட்களில் வேலை செய்வதற்கான கூடுதல் நேர ஊதியம் (ஓவர் டைம்), சாதாரண ஊதிய விகி தத்தை விட 2 மடங்கிற்கு குறைவாக இருக்கக்கூடாது.

ஒரே ஊதிய காலத்தில் ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் நிறுவனங்கள் பிடித்தம் செய்ய முடியாது. அபராதம் அல்லது இழப்பீடாகப் பிடித்தம் செய்வதற்கு முன்பு, தொழிலாளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க வேண்டும்.

நிறுவனங்கள் தொழிலாளர் பதிவேடுகள், ஊதியம், ஓவர் டைம் மற்றும் வருகை பதிவேடுகளை 5 ஆண்டுகளுக்கு பாதுகாக்க வேண்டும். சம்பள நாளன்றோ அல்லது அதற்கு முன்போ தொழிலாளர்களுக்கு ஊதிய ரசீது வழங்குவது கட்டாயமாகும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT